தாப்பா, ஜூலை.14-
பேராக், தாப்பாவில், ஜாலான் பஹாங் சாலையின் ஓரத்தில் பாதாளத்தில் கடந்த சனிக்கிழமை ஆடவர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பபட்டச் சம்பவத்தை போலீசார் கொலை என்று வகைப்படுத்தியுள்ளனர்.
இதன் தொடர்பில் கொலையாளியைக் கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று தாப்பா மாவட்ட போலீஸ் தலைவர் ஜொஹாரி யாஹ்யா தெரிவித்தார்.
ஒரு மழுங்கிய பொருளினால், அந்த நபர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தலை, முகம், மார்பகம், முதுகு முதலிய பகுதிகளில் கடும் வீக்கம் காணப்பட்டுள்ளது.
அரைக்கால் காற்சட்டையும், ஒரு டீ சட்டையையும் அணிந்த நிலையில் அந்த ஆடவரின் சடலம் 13 மீட்டர் பாதாளத்தில் தலைக்குப்புறக் கிடந்தது, வழிப்போக்கர்கள் கண்டுபிடித்து தகவல் அளித்ததாக ஜொஹாரி யாஹ்யா தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டு தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.








