மனிதக் கடத்தலை ஒழிப்பதற்கான குறைந்தபட்சத் தரநிலைகளை மலேசியா முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை என்றாலும், அதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
அதன் படி, அமெரிக்காவின் மனிதக் கடத்தல் தொடர்பான டிஐபி அறிக்கையில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தியர் 2 தரவரிசையில் மலேசியா இடம்பெற்றுள்ளது.
கடந்த ஆண்டில் மனிதக் கடத்தல் தொடர்பான விசாரணைகள், வழக்குத் தொடரல்கள் மற்றும் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இருப்பினும், ஊழல், தொழிலாளர் ஆட்சேர்ப்பு முகவர்களைக் கட்டுப்படுத்துவதில் உள்ள பலவீனம், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதில் நிலவும் சீரற்ற நடைமுறைகள் ஆகியவை முன்னேற்றத்தைப் பாதிப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், மனிதக் கடத்தலுக்கும் சட்டவிரோதக் குடியேறிகள் கடத்தலுக்கும் இடையிலான வேறுபாட்டை அதிகாரிகள் சரியாகக் கையாளாததும் கவலையளிப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.








