கோலாலம்பூர், ஆகஸ்ட்.02-
முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது மகன்களின் செல்வச் செழிப்பு விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடகமாடக்கூடாது என்று முன்னாள் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான் ஶ்ரீ ராயிஸ் யாத்திம் கேட்டுக் கொண்டுள்ளார்.
துன் மகாதீரின் இரு புதல்வர்களான டான் ஶ்ரீ மொக்ஸானி மற்றும் மிர்ஸான் ஆகியோரின் சொத்து விபரங்கள் குறித்து பல மாதங்களாக ஆய்வும், விசாரணையும் மேற்கொண்ட மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், அவர்கள் கொண்டுள்ள சொத்துகள் குறித்து மன நிறைவு தெரிவித்து விட்டது.
துன் மகாதீரின் இரு மகன்களின் சொத்து விபரங்கள் மீதான பிரகடனத்தில் தாம் மன நிறைவு கொள்வதாக எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி அறிவித்து விட்டார்.
இருப்பினும் அவ்விருவரின் சொத்து விபரங்களில் எஸ்பிஆர்எம் இன்னமும் மன நிறைவு கொள்ளவில்லை என்றால் அவர்கள் மீது தாராளமாக வழக்கு தொடுக்கலாம்.
அதை விடுத்து, இவ்விவகாரத்தில் பிரதமர் அன்வார் தொடர்ந்து எதிர்ப்புணர்வைக் காட்டி வருவதும், நாடகமாடுவதும் ஏற்புடையச் செயல் அல்ல என்று ஒரு சட்ட வல்லுநரான ராயிஸ் யாத்திம் தெரிவித்துள்ளார்.








