கோலாலம்பூர், ஆகஸ்ட்.30-
ஜோகூர், சிகாமட்டை நில நடுக்கம் மீண்டும் உலுக்கியது. இன்று காலை 7.29 மணியளவில் ஏற்பட்ட மிதமான நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆகப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
சிகாமட் மாவட்டத்தில் கடந்த ஏழு நாட்களில் ஐந்தாவது முறையாக நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா தெரிவித்துள்ளது.
இன்று காலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் சிகாமட் நகரிலிருந்து வட கிழக்காக 102.8 பாகையில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக மெட்மலேசியா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நில நடுக்கம் பல இடங்களில் உணரப்பட்டுள்ளது. ஐந்தாவது முறையாக ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தினால் சிகாமட் மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
இதனிடையே இயற்கைச் சீற்றத்திலிருந்து மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க ஜோகூர் மாநிலத்தில் உள்ள அனைத்து சூராவ் மற்றும் பள்ளிவாசல்களில் சிறப்புப் பிரார்த்தனை நடத்துமாறு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
எந்தவொரு விரும்பத்தகாத சம்பவம் நிகழாமல் மக்களைப் பாதுகாக்க இறைவன் அருள் புரிய வேண்டும் என்று மாமன்னர் குறிப்பிட்டுள்ளார்.








