புத்ராஜெயா, டிசம்பர்.05-
லஞ்ச ஊழலில் சம்பந்தப்படக்கூடிய எந்தவொரு பணியாளரையும், அதிகாரியையும் ஒரு போதும் பாதுகாக்கக்கூடாது என்று அரசாங்கத் தலைவர்களுக்கும், அரசாங்கத்தின் அனைத்து அமலாக்க ஏஜென்சிகளுக்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவுறுத்தியுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த எந்தவோர் அதிகாரியும் ஊழல் குற்றங்களில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராகவும் சட்டம், பாகுபாடுயின்றி அமல்படுத்தப்படுவதை உறுதிச் செய்வதற்கு இந்த உறுதிப்பாடு மிக முக்கியமானது என்று பிரதமர் வலியுறுத்தினார்.
அரசாங்கத் தலைவர்களும், அமலாக்க ஏஜென்சிகளும் லஞ்ச ஊழலில் ஈடுபடும் எந்தவோர் அதிகாரியையும், திரைக்குப் பின்னால் மறைத்து வைக்காமல் துணிந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டைக் காக்க முடியும் என்று பிரதமர் விளக்கினார்.
நமது அதிகாரி ஒரு சிறு தவறு செய்தால் ஒழுங்கு நடவடிக்க எடுக்கலாம். அந்த நடவடிக்கையில்கூட அமலாக்க ஏஜென்சியின் ஒப்புதல் இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டைப் பாதுகாக்க முடியும். அந்த தவறு என் அலுவலகத்தில் நிகழ்ந்தால் கூட எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கியை அழைப்பேன் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
இன்று வெள்ளிக்கிழமை புத்ராஜெயாவில் 2025 ஆம் ஆண்டுக்கான அனைத்துலக லஞ்ச ஊழல் எதிர்ப்புத் தினக் கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்ட நினைவுறுத்தலை விடுத்தார்.








