கோலாலம்பூர், டிசம்பர்.10-
மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாத நிலையில், தாம் சுடப்படக்கூடும் என்ற அச்சத்தில் இருப்பதாக வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் தெரிவித்தார்.
பணி முடிந்து இரவில் வீடு திரும்பும் போது தாம் மிகுந்த அச்சத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் வெளிப்படையான விசாரணைக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார். ஆனால், அந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைப் போலீசார் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கொலை குற்றச்சாட்டாக வகைப்படுத்தத் தவறியிருப்பதே தம்முடைய இந்த அச்சத்திற்குக் காரணமாகும் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் ராஜேஸ் தெரிவித்துள்ளார்.
மூன்று இளைஞர்களை விருப்பம் போல் சுட்டுக் கொல்ல முடியும் என்றால், என்னைப் போன்ற ஒரு சாதாரண பொதுமக்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் உள்ளது என்று ராஜேஸ் கேள்வி எழுப்பினார்.
நள்ளிரவு 12 மணியளவில் தாம் வீடு திரும்பும் போது யாராவது தம்மைத் தடுத்து, சுடப்படலாம் என்ற அச்சம் தற்போது தமக்கு மேலோங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தாம் ஒரு இந்தியர் என்பதால் இந்தப் பயம் தற்போது தமக்கு அதிகமாக உள்ளது என்று இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ராஜேஸ் இதனைத் தெரிவித்தார்.
இவ்வழக்கு தொடர்பில் பிரதமர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வெளிப்படையான விசாரணை மிக முக்கியம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.








