சிரம்பான், ஆகஸ்ட்.06-
சிரம்பான், சிம்பாங் புக்கிட் ஜோங் அருகில் ஜாலான் தெமியாங்கில் 17 வயது இளைஞரை மோதித் தள்ளி, மரணம் விளைவிக்கப்பட்ட விபத்தில் அவ்விடத்திலிருந்து தப்பியோடி விட்ட காரோட்டி ஒருவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகிறது.
நேற்று காலை 6.45 மணிக்கு நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் அந்த இளைஞர் வேலை செய்த இடமான எண்ணெய் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது 28 வயது ஆர். பூவரசன் என்ற சந்தேகப் பேர்வழி, தான் செலுத்திய மெர்சடிஸ் பேன்ஸ் ரகக் காரினால் மோதி மரணம் விளைவித்ததாக நம்பப்படுகிறது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பூவரசன் செலுத்திய மெர்சடிஸ் பேன்ஸ் ரகக் கார், எதிரே வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளோட்டியை நேருக்கு நேர் மோதியதாக நம்பப்படுகிறது என்று சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஹாட்டா சே டின் தெரிவித்தார்.
இந்த விபத்தில் கடுமையான காயங்களுக்கு ஆளான அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரைச் செலுத்திய பூவரசன், காரை அங்கேயே கைவிட்டப் பின்னர் தப்பிச் சென்று விட்டதாக ஏசிபி முகமட் ஹாட்டா குறிப்பிட்டார்.
இந்த விபத்து 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.








