கோலாலம்பூர், ஜூலை.22-
இஸ்ரேலின் நடவடிக்கையைக் கண்டித்தும், காஸாவைப் பாதுகாப்பதில் மலேசியா கொண்டிருக்கும் நிலைப்பாட்டின் காரணமாகவும், இஸ்ரேலின் தேசிய உளவுத் துறையான மொசாட் ஏஜெண்டுகள், மலேசியாவை இலக்காகக் கொண்டு நாட்டிற்குள் நுழைந்து இருக்கக்கூடும் என்பதற்கான சாத்தியத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுக்கவில்லை.
இதன் தொடர்பில் தேவையான முன் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உள்துறை அமைச்சு மேற்கொண்டுள்ளதாக பிரதமர் கூறினார்.
அனைத்துலக புலனாய்வு ஏஜெண்டுகளுடன் ரகசியமாகத் தொடர்பு வைத்திருக்கும் மலேசியப் பிரஜைகளைப் பிடிப்பதும் இந்த நடவடிக்கைகளில் அடங்கும் என்று பிரதமர் விளக்கினார். மொசாட் உளவுத்துறை உட்பட அனைத்துலக உளவுப் படையினர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். அது குறித்து மலேசிய உளவுத் துறைக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் விளக்கினார்.








