பெர்லிஸ் மாநிலத்தின் 15-வது சட்டமன்ற தவணைக்காலம் முடியும் வரை, மந்திரி பெசார் அபு பக்கர் ஹம்சா எந்தவித இடையூறுகளுமின்றி தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என்று பெர்லிஸ் ராஜா துவாங்கு சையத் சிராஜுதீன் ஜமாலுல்லைல் கேட்டுக்கொண்டார்.
பெர்லிஸ் மாநிலத்தின் 15-வது சட்டமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரைத் தொடக்கி வைத்து, உரையாற்றுகையில் அவர் இதனை வலியுறுத்தினார். பெர்லிஸ் ராஜாவின் உரையை பெர்லிஸ் ராஜா மூடா, துவாங்கு சையத் பைசுதீன் புத்ரா ஜமாலுல்லைல் வாசித்தார்.
பெர்லிஸ் ராஜா தமது உரையில் மாநிலத்தின் திட்டமிடப்பட்ட வளர்ச்சிப் பணிகள் தடையின்றி நடப்பதற்கும் மக்களின் நலனுக்கும் நிர்வாக நிலைத்தன்மை மிகவும் அவசியம் என்றும், பெர்லிஸ் அரசு தன்னுடைய அரசு என்பதை சட்டமன்ற உறுப்பினர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் ராஜா நினைவூட்டியுள்ளார்.
அரசியல் நிலைத்தன்மை இருந்தால் மட்டுமே முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற முடியும் என்பதால், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் சுயநலத்தையோ அல்லது அரசியல் லாபத்தையோ முன்னிறுத்தாமல், கருத்து வேறுபாடுகளையும் அகந்தைகளையும் கைவிட்டு மந்திரி பெசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.








