கோலாலம்பூர், ஆகஸ்ட்.20-
ஒரு வர்த்தகப் பெண்மணியான டத்தின் பமேலா லிங் காணாமல் போனது தொடர்பில் போலீசார், இதுவரை 48 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
விசாரணை நடத்தப்பட்ட இந்த 48 பேரில் நான்கு அதிகாரிகள், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மைச் சேர்ந்தவர்கள் என்று அமைச்சர் விளக்கினார்.
பமேலா லிங்கின் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் வாகனம் தாய்லாந்து எல்லைக்கு அருகில் கெடாவில் உள்ள புக்கிட் காயு ஹிட்டாமில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சைஃபுடின் கூறினார்.
42 வயதான பமேலா லிங் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் வாக்குமூலம் அளிப்பதற்கு விசாரணைக்குச் செல்வதாகக் கூறி, கோலாலம்பூர், செராஸிலிருந்து இ-ஹெய்லிங் வாகனத்தில் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை என்று அறிவிக்கப்பட்டது.








