Feb 11, 2026
Thisaigal NewsYouTube
வணிக உரிமம் புதுப்பிக்க லஞ்சம்: சிலாங்கூர் ஊராட்சி மன்ற அதிகாரிகள் 7 பேர் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது
தற்போதைய செய்திகள்

வணிக உரிமம் புதுப்பிக்க லஞ்சம்: சிலாங்கூர் ஊராட்சி மன்ற அதிகாரிகள் 7 பேர் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது

Share:

ஷா ஆலாம், பிப்ரவரி.11-

சிலாங்கூர் மாநிலத்தின் ஊராட்சி மன்றத்தைச் சேர்ந்த ஆறு அதிகாரிகள் மற்றும் ஒரு முன்னாள் அதிகாரி என மொத்தம் ஏழு பேர், வணிக உரிமம் தொடர்பான பணிகளுக்கு லஞ்சம் பெற்றதாகக் கூறி ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மினால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வணிக உரிமங்களை விரைவாகப் புதுப்பிப்பதற்கும், சட்ட நடவடிக்கைகளிலிருந்து சில நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கும் சுமார் 15,000 ரிங்கிட் வரை லஞ்சம் கேட்டதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தச் சந்தேக நபர்கள் 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், இவர்கள் நேற்று காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணிக்குள் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஷா ஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று காலை உத்தரவிட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையின்படி, இவர்கள் 2019 முதல் 2023 வரையிலான காலக் கட்டத்தில் இரண்டு நிறுவன உரிமையாளர்களிடமிருந்து லஞ்சப் பணத்தைப் பெற்றுள்ளனர். மாதந்தோறும் 500 ரிங்கிட் முதல் 15,000 ரிங்கிட் வரை இந்த அதிகாரிகள் தங்களின் தனிப்பட்ட வங்கிச் கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்துள்ளனர். வணிக உரிமங்களை விரைந்து முடிப்பதோடு, குறிப்பிட்ட சில நிறுவனங்கள் சட்ட விதிமீறல்களில் சிக்காமல் இருக்க இவர்கள் பாதுகாப்பு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்தக் கும்பல் முறையற்ற பணப் பரிமாற்றங்கள் மூலம் நீண்ட காலமாகத் திட்டமிட்டுச் செயல்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கைதானவர்கள் அனைவரும் அரசு விதிகளுக்குப் புறம்பாக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் பலரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Related News