துருக்கி, இஸ்தான்புலில் மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எச்.டினால் நிர்வகிக்கப்பட்டு வரும் சபிஹா கொக்சென் அனைத்துலக விமான நிலையத்தை மலேசிய நிலைய நிறுவனம், தொடர்ந்து வழிநடத்துவதற்கு துருக்கி அனுமதி வழங்கியிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இன்று தொடங்கியுள்ள 78 ஆவது ஐ.நா. பொதுப் பேரவையில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் வந்துள்ள துருக்கி அதிபர் ரெசிப் தயிப் எர்டோகன் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் விளக்கினார்.
193 கோடி வெள்ளி குத்தகை மதிப்பில் 20 வருட குத்தகை அடிப்படையில் மலேசியா ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம், இஸ்தான்புல், சபிஹா கொக்செப் அனைத்துலக விமான நிலையத்தை திறம்பட நிர்வகித்து வருகிறது. 3,500 மீட்டர் நீளமுள்ள ஓடுபாதையை கொண்டுள்ள இந்த விமான நிலையம், நவீன வசதிகளை கொண்டுள்ளது. மலேசியா ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் நிர்வகித்து வரும் 5 பன்னாட்டு விமான நிலையங்களில் சபிஹா கொக்சென் விமான நிலையமும் ஒன்றாகும்.








