பினாங்கு, ஜாலான் புக்கிட் காம்பிர் பகுதியில் நோயாளி ஒருவரை அழைத்துச் செல்ல சைரன் ஒலியுடன் விரைந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸ் மீது கார் மோதியதில் ஐந்து பேர் காயமடைந்தனர்.
நேற்ற வியாழக்கிழமை காலை 11.02 மணியளவில், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் உள்ள போக்குவரத்துச் சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்தது. 19 வயது மாணவி ஓட்டி வந்த புரோடுவா ஆக்சியா கார், ஆம்புலன்ஸ் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ், அங்கு நின்று கொண்டிருந்த புரோட்டோன் சாகா காரின் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த மோதலில் 51 வயது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் அதிலிருந்த மூன்று மருத்துவ உதவியாளர்கள் காயமடைந்தனர். கார் ஓட்டிய மாணவிக்கு நெஞ்சு மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக, புரோட்டோன் சாகா காரை ஓட்டி வந்த 65 வயது முதியவர் காயமின்றி தப்பினார். சமூக வலைதளங்களில் இந்த விபத்து தொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக 1987-ஆம் ஆண்டு போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








