கோத்தா கெமுனிங், ஜூலை.28-
சிலாங்கூர், கோத்தா கெமுனிங் தொகுதியிலுள்ள புக்கிட் கெமுனிங் வட்டாரத்தில் குப்பைகளை சாலையோரங்களிலும் பொது இடங்களிலும் வீசம் பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில் அதற்குத் தீர்வு காண்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளைத் தொகுதி சேவை மையம் மேற்கொண்டு வருகிறது.
அந்நடவடிக்கையின் ஒரு பகுதியாக குப்பைகளைக் கண்ட இடங்களில் வீசும் தனிநபர்கள் மற்றும் லோரிகளில் கொட்டும் தரப்பினரைக் கண்டறிந்து காணொளி, புகைப்படம் உள்ளிட்ட ஆதாரங்களை வழங்குவோருக்கு தலா 1,000 வெள்ளியை அது வெகுமதியாக வழங்கவிருக்கிறது.
இந்த வெகுமதித் திட்டம் புக்கிட் கெமுனிங் வட்டாரத்தை அதாவது ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 14வது மண்டலத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு பிரத்தியேகமாக அமல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் அளிப்போருக்கு வெகுமதி அளிக்கும் இந்தத் திட்டம் இம்மாதம் 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் உறுப்பினர் யோகேஸ்வரி சாமிநாதன் கூறினார்.

சட்டவிரோதமாகக் குப்பைகளை வீசுவோரைச் சட்டத்தின் பிடியில் நிறுத்தி அவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைப்பதற்கு ஏதுவாக தேவையான ஆதாரங்களை வழங்குவோர் இந்த 1,000 வெள்ளி வெகுமதிக்கு தகுதியானர்கள் என்று யோகேஸ்வரி தெரிவித்தார்.
இந்த வெகுமதித் திட்ட அமலாக்கக் காலத்தில் குறைந்தது பத்து குற்றச் சம்பவங்களைத் தகுந்த ஆதாரங்களோடு பிடிக்க இயலும் எனத் தாங்கள் நம்புவதாகக் கூறிய அவர், இந்நோக்கத்திற்காக தொகுதி சேவை மையம் 10,000 வெள்ளியை ஒதுக்கியுள்ளது என்றார் யோகேஸ்வரி.
அண்மைய சில வாரங்களாக புக்கிட் கெமுனிங் சாலையோரம் உள்பட பல்வேறு இடங்களில் குப்பைகளைச் சட்டவிரோதமாகக் கொட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த வெகுமதித் திட்டம் தொடர்பான மேல் விபரங்களுக்கு 010-2118016 எண்களில் தொடர்பு கொள்ளுமாறு யோகேஸ்வரி கேட்டுக் கொண்டார்.








