கோலாலம்பூர், அக்டோபர்.07-
கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் அத்தொழிலாளர்களின் நலனை மேம்படுத்துவதற்கு ஆழமான ஒத்துழைப்பு கொள்வது குறித்து மலேசியாவும் இந்தியாவும் இணக்கம் கண்டுள்ளன.
கோலாலம்பூரில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான உலக சமூகவியல் பாதுகாப்பு ஆய்வரங்கின் ஒரு பகுதியாக மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம், இந்தியாவின் தொழிலாளர், வேலை வாய்ப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் Dr Mansukh Mandaviya-வுடன் நடத்திய இரு தரப்பு சந்திப்பின் போது இந்த கருத்திணக்கம் காணப்பட்டது.

வளர்ச்சி கண்டு வரும் கிக் தொழிலாளர்களின் முக்கியத்துவத்தையும், பிராந்தியம் முழுவதும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நியாயமான பாதுகாப்பின் அவசியத்தையும் இரு நாடுகளும் அங்கீகரித்துள்ளதாக ஸ்டீவன் சிம் கூறினார்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் கிக் தொழிலாளர்களின் நலன் சார்ந்த சட்ட மசோதாவை மலேசியா நிறைவேற்றியிருப்பதையும் அமைச்சர் ஸ்டீவன் சிம் சுட்டிக் காட்டினார்.
கிக் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த தளங்களில் சரிநிகரான சமூக பாதுகாப்பு அமைப்புகளின் கீழ் அத்தொழிலாளர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிச் செய்வதற்கு அணுக்கமான பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட தரநிலைகள் மிக முக்கியமானவை என்ற பொதுவான புரிதலை மலேசியாவும் இந்தியாவும் பகிர்ந்து கொண்டுள்ளதாக இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
பெரிய பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டியிடும் போது அனைத்துலக தரநிலைகள் இல்லாதது சிறு வணிகங்களைப் பாதகமாக மாற்றக்கூடும் என்பதையும் ஸ்டீவன் சிம் தெளிவுபடுத்தினார்.
எனவே, இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஆசியான் மற்றும் தெற்காசிய நாடுகளிடையே ஆழமான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை மலேசியாவும், இந்தியாவும் வலியுறுத்துகின்றன என்று ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.








