நிபோங் திபால், ஜனவரி.17-
நேற்று வெள்ளிக்கிழமை இரவு பினாங்கு, நிபோங் திபால், ஜாலான் பெசார் பெர்மாத்தாங் கெலிங் பகுதியில் உள்ள வாகனங்கள் கழுவும் இடத்திற்கு முன்புறம், ஆடவர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் இரவு சுமார் 10.20 மணியளவில் நிகழ்ந்தது. கார் கழுவும் நிறுவனத்தின் உரிமையாளர் என நம்பப்படும் 38 வயதுடைய நபர், கடைக்கு முன்னால் இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை நெருங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சந்தேக நபர்கள், அவரை நோக்கி ஆறுக்கும் மேற்பட்ட முறை துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதில் அந்த நபரின் உடலின் பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சைக்காக பாரிட் புந்தார் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, பின்னர் தைப்பிங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸி இஸ்மாயில் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் காவல்துறை ஊடக அறிக்கையை வெளியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்தச் சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 302-வது பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








