கோலாலம்பூர், ஜனவரி.09-
இராணுவத் தளவாடங்கள் மற்றும் பராமரிப்பு தொடர்பான குத்தகைகளை வழங்குவதில் நிகழ்ந்த ஊழல் குறித்து விசாரணை நடத்தி வரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், ஒரு முக்கிய நடவடிக்கையாக 6.9 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்களைப் பறிமுதல் செய்துள்ளது.
எஸ்பிஆர்எம் அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில் ரொக்கப் பணம் மற்றும் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளன. சுமார் 6 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ரொக்கப் பணம் பல்வேறு அந்நிய நாட்டுப் பணங்களில் கைப்பற்றப்பட்டன.
சுமார் 9 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் மற்றும் தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றுடன் சில சொகுசு கார்கள் மற்றும் விலை உயர்ந்த கைக்கடிகாரங்களும் விசாரணைக்காக முடக்கப்பட்டுள்ளன.
தற்காப்பு அமைச்சின் கீழ் உள்ள சில முக்கிய இராணுவத் திட்டங்கள் மற்றும் உபகரணங்கள் விநியோகம் தொடர்பான குத்தகைகளைப் பெறுவதற்கு, சில நிறுவனங்கள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த சில நாட்களாக எஸ்பிஆர்எம் தீவிர விசாரணை நடத்தி அதிரடியாக ரொக்கப் பணத்தையும் தங்கத்தையும் கைப்பற்றி வருகிறது.








