கோலாலம்பூர் டிசம்பர்.20-
ஜேபி சென்ட்ரல் – கேஎல் சென்ட்ரல் இடையிலான ரயில் டிக்கெட்டுகள் இந்த ஆண்டு இறுதி வரை ஏறக்குறைய அனைத்துமே விற்றுத் தீர்ந்து விட்டன.
கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்தப் புதிய இடிஎஸ் ரயில் சேவைக்கு மக்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, வார இறுதி நாட்கள், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலத்திற்கான டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்த சில நாட்களிலேயே விற்றுத் தீர்ந்து விட்டன.
பெரும்பாலான பயணங்களுக்கு டிக்கெட்டுகள் இல்லை என்றாலும், மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு சில இடங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன என்று மலாயன் ரயில்வே பெர்ஹாட் தெரிவித்துள்ளது.
பயணிகளின் கோரிக்கையை ஏற்று, வரும் 2026 ஜனவரி முதல் தினசரி சேவைகளின் எண்ணிக்கை நான்கிலிருந்து எட்டாக உயர்த்தப்படவுள்ளது என்று அதன் தொழில்நுட்ப தலைமை அதிகாரி அஹ்மாட் நிஸாம் முகமட் தெரிவித்தார்.








