கோத்தா கினபாலு, செப்டம்பர்.03-
சபா மாநிலத்தில் மரணம் அடைந்த முதலாம் படிவ மாணவி ஸாரா கைரினா மகாதீர் மீதான மரண விசாரணை கோத்தா கினபாலு நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.
இந்த மரண விசாரணையில், மாணவி ஸாராவைப் பகடிவதை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 5 மாணவிகளின் வழக்கறிஞர்கள் பங்கு கொள்வதற்கு மரண விசாரணை நீதிபதி அமீர் ஷா அமீர் ஹசான் அனுமதி அளித்தார்.
அந்த ஐந்து மாணவிகளும், இவ்வழக்கில் நலன் சார்ந்த தரப்பினர் என்று கருதுப்படுவதால் அந்த மாணவிகளின் வழக்கறிஞர்கள் பங்கு கொள்வதற்குத் தடை ஏதும் இல்லை என்று நீதிபதி அமீர் ஷா தெரிவித்தார்.
இந்த மரண விசாரணையில் ஐந்து மாணவிகளின் வழக்கறிஞர்கள் பங்கு கொள்ளும் முடிவை, கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
இது தொடர்பான விண்ணப்பத்தை நேரடியாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல், மரண விசாரணை நீதிபதியிடம் ஐந்து மாணவிகளின் வழக்கறிஞர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று உயர்நீதிமன்றம் ஆலோசனை கூறியிருந்தது.








