2022-2023 ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் சிறந்த குழந்தை என்று புகழப்படும் பேரா,மகிழம்பு தமிழ்ப்பள்ளி மாணவி புனிதமலர் இராஜசேகரன்,தமது தொடர் சாதனையின் மற்றொரு மைல்கல்லாக கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளார்.தமது ஞானக் கண்ணில் பல்வேறு அதிசயத்தக்க சாதனைகளை நடத்தி வரும் பத்து வயது நிரம்பிய மாணவி புனிதமலர், கண்களைக் கட்டிக்கொண்டு சதுரங்க காய்களை அடுக்கி கின்னஸ் உலக சாதனையை படைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.கண்களை கட்டிக்கொண்டு சதுரங்க காய்களை முறையாக அடுக்குவதற்கு மாணவி புனிதமலர் எடுத்துக்கொண்ட நேரம் 45.72 விநாடிகளாகும். ஏற்கனவே கின்னஸ் உலக சாதனையில் இருப்பவர், இதற்காக எடுத்துக்கொண்ட நேரம் ஒரு நிமிடம் 02 விநாடிகளாகும். இந்தியாவை சேர்ந்த அவரின் கின்னஸ் உலக சாதனையை புனிதமலர் வெற்றிகரமாக முறியடித்து, அந்த உலக சாதனையை தன்வசமாக்கியுள்ளார்.இராஜசேகரன் - சிவசங்கரி தம்பதியரின் ஒரே புதவியான புனிதமலர், பள்ளியின் பிரதான சதுரங்க ஆட்டக்காரராகவும் விளங்குகிறார்.
இரு கண்களை கட்டிக்கொண்டு தனது ஞானக் கண்ணால் பொருட்களை தடவி அவற்றின் நிறங்களையும துல்லியமாக கூறும் புனிதமலர், எண்களையும் தொட்டுப்பார்த்தே அதன் மதிப்பை சரியாக சொல்லும் திறனை கொண்டுள்ளார்.தமது பெயருக்கு ஏற்பவே ஞானக்கண்ணில் இந்த புனித வேள்வியை கையில் எடுத்துள்ள புனிதமலர், தற்போது கின்னஸ் உலக சாதனையாளர் வரிசையில் இடம் பெற்று, குடும்பத்திற்கும், பள்ளிக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். 







