கோலாலம்பூர், ஜனவரி.16-
நாட்டில் திருமணம் ஆகாத 3.1 மில்லியன் தனிநபர்களுக்கு, சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா எனப்படும் சாரா அடிப்படை உதவித் தொகை இன்று ஜனவரி 16ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.
குறிப்பாக இந்த உதவித்தொகை B40 பிரிவினர், ஏழைகள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, நடுத்தர வருமானப் பிரிவினருக்கும், குறிப்பாகத் தங்கள் வாழ்க்கையையும் பணியையும் கட்டமைக்கத் தொடங்கும் திருமணம் ஆகாத இளைஞர்களுக்கும் பெரும் பயனளிக்கும் என்று இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
‘திருமணம் ஆகாதோர்' பிரிவின் கீழ் வழங்கப்படும் இந்த எஸ்டிஆர் உதவித்தொகை, மக்களின் நிதிச் சுமையைக் குறைப்பதற்கும், இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சியில் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதிச் செய்வதற்குமான அரசின் முக்கிய முன்னெடுப்புகளில் ஒன்றாகும்.
சுயதொழில் செய்பவர்கள், குறைந்த வருமானம் பெறுபவர்கள் அல்லது இப்போதுதான் வேலையில் சேர்ந்திருக்கும் இளைஞர்களுக்கு இந்த உதவி மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும்; இது அவர்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும். இந்தத் தொகையை மிகவும் பொறுப்புடன் கையாளுமாறு இளைஞர்களை அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கவும், வீண் செலவுகளைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்த உதவியைப் பயன்படுத்தி இளைஞர்கள் தங்கள் திறன்களையும், வேலை வாய்ப்புத் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.








