ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.14-
உதவித் தொகைக்கு உரிய பெட்ரோல் ரோன் 95 எரிபொருள், சிங்கப்பூர் பதிவு எண்ணைக் கொண்ட வாகனங்களுக்கு விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் ஜோகூர் பாருவில் உள்ள சில எண்ணெய் நிலையங்கள், சிங்கப்பூர் வாகனங்களுக்குத் தொடர்ந்து உதவித் தொகைக்குரிய பெட்ரோலை விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் வாகனங்கள் மலேசிய எண்ணெய் நிலையங்களில் பெட்ரோல் ரோன் 95 ஐ விற்பனைச் செய்வதை ஆதாரத்துடன் காட்டும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வைரலாகி வருகின்றன.
ஜோகூர் பாரு, பண்டானில் ஒரு எண்ணெய் நிலையம், சிங்கப்பூர் வாகனங்களுக்கு பெட்ரோல் ரோன் 95 ஐ விற்பனைச் செய்தது தொடர்பில் விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஜோகூர், உள்நாட்டு வாணிப அமைச்சின் இயக்குநர் லிலிஸ் சஸ்லிண்டா போர்னோமோ தெரிவித்தார்.








