ஜோகூர் பாரு, ஜனவரி.11-
ஜோகூர் பாரு, சுல்தான் இஸ்கண்டார் கட்டடத்தில் உள்ள குடிநுழைவு இ-கேட் அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு நீடிப்பதால், வெளிநாட்டுப் கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டும் எல்லையைக் கடப்பதில் தற்காலிகச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். இந்தத் தொழில்நுட்ப முடக்கம் மலேசியக் குடிமக்களைப் பாதிக்காது என்பதால், அவர்கள் எப்போதும் போல இ-கேட் வசதியைத் தடையின்றிப் பயன்படுத்தலாம் என எல்லைக் கட்டுப்பாட்டு முகமை - AKPS தெளிவுபடுத்தியுள்ளது.
நெரிசலைக் குறைக்கும் விதமாக, வெளிநாட்டுப் பயணிகள் 'MyNiise' செயலியைப் பதிவிறக்கம் செய்து QR அல்லது முகப்பிடங்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வருகைக்கு முன்பே MDAC எனப்படும் 'மலேசிய டிஜிட்டல் வருகை அட்டையை' பூர்த்தி செய்யவும், Touch 'N Go அட்டையில் போதிய இருப்பு இருப்பதை உறுதிச் செய்யவும் அதிகாரிகள் பயணிகளைக் கேட்டுக் கொண்டுள்ளனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர குடிநுழைவுத் துறை தீவிரப் பழுதுபார்ப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதே வேளை, குறிப்பிட்ட சில இ-கேட் வழிகள் மட்டும் வெளிநாட்டவர்களுக்காக இன்னும் செயல்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.








