ஜார்ஜ்டவுன், நவம்பர்.03-
தற்போது நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் முதலாவது வாசிப்புக்கு விடப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் சட்டத் திருத்தம் மீதான மசோதா நிறைவேற்றப்படுமானால் தொழிலாளர்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்புச் சலுகை அனுகூலம் வழங்கப்படும் என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
மலேசியத் தொழிலாளர்களுக்கு வேலை நேரத்திற்கு அப்பாற்பட்ட நிலையிலும் பாதுகாப்புச் சலுகை வழங்க இந்த உத்தேசச் சட்டத் திருத்த்ச் மசோதா வகை செய்வதாக அவர் குறிப்பிட்டார்.
தவிர இந்த நாட்டில் இந்தியர்கள் நலன் கருதி குறிப்பாக இளையோர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு தமது மனித வள அமைச்சின் கீழ் மிசி ( MISI ) திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகமான இந்திய இளையோர்கள் உயர் வருமானம் பெறும் அளவிற்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
பினாங்கு மாநில ஜசெக ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பினாங்கு மாநில ஜசெக தலைவருமான ஸ்டீவன் சிம் இதனைத் தெரிவித்தார்.
மனித வள அமைச்சின் MISI திட்டம், இந்தியர்களின் குறிப்பாக இளையோர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன் அவர்களின் எதிர்கால நல்வாழ்வு சுபிட்சமாக்குவதை உறுதிச் செய்கிறது என்று ஸ்டீவன் சிம் தமது உரையில் குறிப்பிட்டார்.








