ஜார்ஜ்டவுன், அக்டோபர்.13-
ஆடவர் ஒருவரின் நிர்வாணப் படத்தைக் காட்டி, பணம் கேட்டு மிரட்டி வந்த குற்றத்திற்காக குடும்ப மாது ஒருவருக்கு ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று பத்தாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.
6 குழந்தைகளுக்கு தாயான 33 வயது நூர் ஹுஸ்னா நோர் பஹாருடின் என்ற அந்த மாது தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் நட்ராதும் முகமட் சைடி, இந்த அபராதத் தொகையை விதித்தார்.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக 10 மாத சிறைத் தண்டனை விதிப்பதாக மாஜிஸ்திரேட் நட்ராதும் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
கடந்த ஜுன் 14 ஆம் தேதி பினாங்கு, லிந்தாங் கம்போங் ராவா என்ற இடத்தில் 28 வயது முகமட் யாசிர் ஃபாருக் என்பவரின் நிர்வாணப் படத்தைப் பயன்படுத்தி, அந்த ஆடவரிடம் பணம் கேட்டு தொடர்ந்து அச்சுறுத்தி வந்ததாக அந்த மாதுவிற்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டது.








