கோலாலம்பூர், டிசம்பர்.23-
வீட்டுக் காவல் அனுமதி தொடர்பில் நீதிமன்றத் தீர்ப்பு தனக்கு சாதகமாக இருக்கும் என்று தனது தந்தை டத்தோ ஶ்ரீ நஜீப் ரஸாக் பெரிதும் நம்பியிருந்ததாக அவரின் மூத்த மகன் நிஸார் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வீட்டுக் காவலில் எஞ்சிய தண்டனைக் காலத்தைக் கழிக்க முடியும், வீட்டிற்கு திரும்பப் போகிறோம் என்ற நம்பிக்கையில் தனது தந்தை மிகவும் மகிழ்ச்சியாவும், உற்சாகமாகவும் காணப்பட்டதாகவும், சிறைச்சாலையில் உள்ள தனது பொருட்கள் அனைத்தையும் சுத்தம் செய்யும் பணியில் அவர் ஈடுபட்டு இருந்ததாகவும் நிஸார் குறிப்பிட்டார்.
எனினும் தனது தந்தைக்கு ஆதரவாகப் பிரார்த்தனை செய்தவர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் நிஸார் தனது சமூக வலைதளப் பக்கத்தின் வாயிலாக நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
என் தந்தைக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன், தயவு செய்து அவருக்காகத் தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள் என்றும், சட்ட ரீதியான போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








