புத்ராஜெயா, ஆகஸ்ட்.07-
முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் தமது எஞ்சிய சிறைவாசத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்கு ஒரு கூடுதல் அரசாணை உத்தரவு இருப்பதாகக் கூறப்படும் வழக்கை விசாரணை செய்வதற்கு அனுமதி அளித்து இருக்கும் அப்பீல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு செய்ய முடியுமா? முடியாதா? என்பது குறித்து கூட்டரசு நீதிமன்றம் அடுத்த வாரம் புதன்கிழமை தீர்ப்பு அளிக்கவிருக்கிறது.
இவ்விவகாரம் தொடர்பாக கூட்டரசு முதிர் நிலை வழக்கறிஞர் ஷம்சூல் போல்ஹசானுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் இதனை உறுதிப்படுத்தினார்.
கடந்த ஜுலை 9 ஆம் தேதி மூவர் கொண்ட நீதிபதிகள் குழுவினருக்குத் தலைமையேற்ற மலாயா தலைமை நீதிபதி ஹஸ்னா ஹாஷிம், இவ்வழக்கு தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஷம்சூல் போல்ஹசான் மற்றும் நஜீப் வழக்கறிஞர் ஷாஃபி அப்துல்லா ஆகியோரின் வாதத் தொகுப்புகளைச் செவிமடுத்தப் பின்னர் தீர்ப்பை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
ஒத்தி வைக்கப்பட்டுள்ள தீர்ப்பு, அடுத்த வாரம் புதன்கிழமை அளிக்கப்படும் என்பதை கூட்டரசு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நஜீப்பை வீட்டுக் காவலில் வைப்பதற்கு கூடுதல் அரசாணை உத்தரவு இருப்பதாகக் கூறப்படும் வழக்கில் மேலும் கூடுதல் ஆதாரங்களுடன் அவ்வழக்கை விசாரணை செய்வதற்கு கடந்த ஜனவரி 6 ஆம் தேதி புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் 2 க்கு 1 என்ற பெரும்பான்மையில் முன்னாள் பிரதமருக்கு அனுமதி அளித்தது.
எனினும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அனுமதிக்குமாறு சட்டத்துறை அலுவலகம் தற்போது கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.








