ஷா ஆலாம், ஆகஸ்ட்.14-
முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லியின் 12 வயது மகன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கிள்ளான் முன்னாள் எம்.பி. சார்ல்ஸ் சந்தியாகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக சமூகத்தில் வன்முறை மற்றும் மிரட்டலுக்கு இடமில்லை என்று சார்ல்ஸ் சந்தியாகோ கண்டித்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அச்சுறுத்தல் என்ற போர்வையில் மிரட்டப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று சார்ல்ஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டார்.
அதே வேளையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எதிராக கட்டவிழ்க்கப்படும் அச்சுறுத்தல்கள் அல்லது தாக்குதல்கள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகக் கருதப்படும்.
அந்த 12 வயது சிறுவனுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு இன்னும் ஒரு வாரத்திற்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று போலீஸ் துறையை சார்ல்ஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டார்.
அதே வேளையில் பொதுமக்களின் நம்பிக்கையைப் பேணுவதற்கு இந்தத் தாக்குதல் சம்பவம் மீதான விசாரணை விரைந்து நடத்தப்பட வேண்டும், வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும் என்று சார்ல்ஸ் சந்தியாகோ இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.
தவிர ரஃபிஸி ரம்லியின் குடும்பத்தினருக்கு உடனடியாகப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். சிறுவனின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று சார்ல்ஸ் சந்தியாகோ கோரிக்கை விடுத்தார்.
வன்முறை என்பது ஓர் அரசியல் வெளிப்பாடு அல்ல. அது கோழைத்தனம். இத்தகைய வன்முறைகள், சட்டத்தின் பலம் கொண்டு, முழு வீச்சாக ஒடுக்கப்பட வேண்டும் என்று சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்தினார்.








