குவாந்தான், ஜனவரி.22-
மலேசியாவில் நீண்ட காலமாக நீடித்து வரும் மொழி தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மலேசியர்களைக் கேட்டுக் கொண்டார்.
அரசாங்கத்தின் பல்லின மொழிக் கல்வி அணுகுமுறையானது, அதிகாரப்பூர்வ மொழியான மலாய்மொழியின் அந்தஸ்தைக் குறைப்பதற்காக அல்ல என்று அவர் விளக்கினார். மாறாக, இது ஒற்றுமையை வலுப்படுத்தவும், மாணவர்கள் பல மொழிகளில் தேர்ச்சி பெறுவதற்கான சம வாய்ப்புகளை வழங்கவும் உருவாக்கப்பட்டது என்றார்.
பல்லின மொழித் திறன் என்பது உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கும், நாட்டின் அடையாளத்தை விட்டுக் கொடுக்காமல் இளைய தலைமுறையினரின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் ஒரு மதிப்புமிக்க சொத்து என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இனங்களுக்கு இடையே மொழி குறித்த முடிவில்லாத மோதல்களைத் தாங்கள் இனி விரும்பவில்லை, என்று பகாங், பெந்தோங்கில் உள்ள பெர்திங் சீனப்பள்ளியில் சீன சமூகத்தினருடனான சந்திப்பின் போது டத்தோ ஶ்ரீ அன்வார் பேசினார்.
குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே தற்போதைய முன்னுரிமை. உள்ளூர் அளவில் மட்டுமல்லாது ஆசியா மற்றும் உலக அளவில் போட்டியிட அவர்கள் தயாராக இருக்க வேண்டும். அதற்காக மொழி, அறிவியல், கணிதம், டிஜிட்டல் திறன் மற்றும் செயற்கை நுண்ணறிவான AI ஆகியவற்றில் மாணவர்கள் சிறுவயதிலிருந்தே தேர்ச்சி பெறுவது அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார்.








