ஜோகூர் பாரு, அக்டோபர்.05-
யாயாசான் பெலாஜாரான் மாரா என்றழைக்கப்படும் மாரா கல்வி அறவாரியத்தை மேலும் வலுப்படுத்தவும், நாட்டின் கல்வி வளர்ச்சிக்குத் தொடர்ந்து பெரும் பங்களிப்பை வழங்கவும், நான்கு முக்கியச் சீர்திருத்த நடவடிக்கைகளைத் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி முன்மொழிந்துள்ளார். முதலாவதாக, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களைக் கொண்டு நாடு முழுவதும் ஸ்குவாட் ஒய்பிஎம் உறுப்பினர்களைப் பலப்படுத்துவது இதன் முக்கிய இலக்காகும். இரண்டாவதாக, தொழில்நுட்பம், தொழிற்கல்விப் பயிற்சிக்கு முக்கியத்துவம் அளித்து, மாரா-வின் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும். மூன்றாவது நடவடிக்கை, கிராமப்புற இளைஞர்களுக்குத் துல்லியமான இலக்குடன் உதவிகளை விரிவுபடுத்துவது, நான்காவது, மாநில, நாடாளுமன்ற மட்டத்தில் உள்ள ஒய்பிஎம் குழுக்களின் செயல்பாடுகளைப் பலப்படுத்துவது ஆகும். இந்தச் சீர்திருத்தங்கள் மூலம், அறிவு, துணிவு, உயர் ஒழுக்கம் கொண்ட ஒரு சிறந்த தலைமுறையை உருவாக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








