கூச்சிங், ஜூலை.13-
குழந்தைகளிடையே அதிகரித்து வரும் இணையப் பாதுகாப்பு ஆபத்தைக் கையாள, சிறப்புச் சட்டங்களை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று மகளிர், குடும்பம், சமூகநல மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ நான்சி ஷுக்ரி வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான யுனிசேஃப்பின் தரவுகளின்படி, மலேசியாவில் 83 விழுக்காடு குழந்தைகள் இணைய ஆபத்துகளுக்கு ஆளாகிறார்கள். மேலும் அவர்களில் 40 விழுக்காட்டினர் ஆபத்துக்களை அறியாமலும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் திறன் இல்லாமலும் உள்ளனர் என்பது கவலைக்குரியது.
குழந்தைகளுக்கு எதிரான இணைய அச்சுறுத்தல்கள், தனியுரிமை மீறல்கள், தகவல் முறைகேடல்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்க இந்தச் சட்டம் அவசியமாகும். இந்தச் சட்டத்தை உருவாக்குவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சுகள், மலேசிய தொடர்பு - பல்லூடக ஆணையம் உள்ளிட்ட பல தரப்பினரின் ஒத்துழைப்பு தேவைப்படும் என்றார் அவர்.








