பாலிங், செப்டம்பர்.05-
தாய்லாந்து, டானோக்கில் சாலை தடுப்பு சோதனையின் போது M16 ரகத்திலான இரண்டு ரைபில் துப்பாக்கிகள் மற்றும் 450 தோட்டாக்களுடன் பிடிபட்ட மலேசிய ஆடவர், திட்டமிட்ட குற்றச்செயல் கும்பலுடன் தொடர்புடையவரா அல்லது வெறுமனே துப்பாக்கிகளைக் கடத்தி வரும் போக்குவரத்து சேவை வழங்கும் நபரா? என்பது குறித்து விசாரணை செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
துப்பாக்கிகளையும், தோட்டாக்களையும் தாய்லாந்திலிருந்து பெறுவதற்கான அந்த மலேசிய பிரஜையின் உண்மையான நோக்கம் என்ன, அவரது பின்னணி என்ன என்பது குறித்து விரிவாக ஆராயப்படும் என்று சைஃபுடின் குறிப்பிட்டார்.
இது, ஒரு கும்பலாக செயல்படும் சிண்டிக்கேட் கூறுகள் அல்லது குற்றச்செயல்கள் தொடர்புடையது அல்ல என்று தொடக்க விசாரணையில் பெரிதாகக் கருதப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
எனினும் மலேசியாவிற்கும், தாய்லாந்துக்கும் இடையில் அரசாங்க அளவில் மட்டுமின்றி போலீஸ் துறையுடனும் நல்லதொரு தொடர்பு இருப்பதால் இந்தச் சம்பவம் தொடர்பில் மலேசியா உடனடியாக தகவல் பெற்றதாக சைஃபுடின் குறிப்பிட்டார்.








