கோலாலம்பூர், ஜனவரி.25-
சுமார் 300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு நிதி முறைகேடு தொடர்பான விசாரணையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மொத்தம் 9.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொகுசு வாகனங்களையும் அசையாச் சொத்துக்களையும் பறிமுதல் செய்துள்ளது. இந்த மோசடி தொடர்பாகக் கடந்த வியாழக்கிழமை முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க 'டான் ஸ்ரீ' அந்தஸ்து கொண்ட நபர் இன்று விடுவிக்கப்பட்ட வேளையில், அதே வழக்கில் தொடர்புடைய 'டத்தோ' பட்டம் கொண்ட பெண்மணி நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டதாக ஆணையத்தின் நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.
தற்போது வரை 6 வீடுகள், ஒரு நிலப்பகுதி, இரண்டு சொகுசு வாகனங்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, 14 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டு அவற்றிலுள்ள பணத்தின் அளவு குறித்து வங்கி அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இதுவரை 10 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் நலன் சார்ந்த இந்த ஊழல் விசாரணையை விரைந்து முடிக்க ஆணையம் உறுதியுடன் செயல்பட்டு வருவதாகவும் அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி உறுதிப்படுத்தியுள்ளார்.








