செம்மோர், ஆகஸ்ட்.27-
கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் பேரா, செம்மோர், 156 ஆவது கிலோமீட்டரில் ஒரு கோயிலுக்கு அருகில் மலாயன் ரயில்வே பெர்ஹாட்டின் கொமுட்டர் ரயில் மோதி, உயிரிழந்த ஆடவர், தஞ்சோங் ரம்புத்தான், பஹாகியா மனநல மருத்துவமனையைச் சேர்ந்த நோயாளி என்று அடையாளம் கூறப்பட்டுள்ளது.
ரயில் மோதி உடல் அவயங்கள் சிதறிய நிலையில், சம்பந்தப்பட்ட நபர், அந்த மனநல மருத்துவமனையிலிருந்து தப்பித்து செம்மோரை நோக்கி நடந்து வந்து, ரயில் இருப்புப் பாதையில் காத்திருந்ததாக நம்பப்படுகிறது.
40 வயது மதிக்கத்தக்க அந்த நபரை அவரின் குடும்பத்தினர் அடையாளம் கூறினர் என்று ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் தெரிவித்தார்.
ரயில் இருப்புப் பாதையில் சிதறிய அந்த நபரின் உடல் அவயங்களை மோப்ப நாயின் உதவியுடன் தடயவியல் போலீசார் மீட்டனர்.








