ஷா ஆலாம், டிசம்பர்.11-
சமூக ஊடகங்களில் வெறுப்புணர்ச்சியைத் தூண்டக்கூடிய இனம் மற்றும் மதம் சார்ந்த எதிர்மறையான கருத்துக்களைச் சகித்துக் கொள்ள முடியாது என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா வலியுறுத்தியுள்ளார்.
இது போன்ற எதிர்மறையான கருத்துகள் மற்றும் பதிவுகள் சினமூட்டக்கூடியது என்பது மட்டுமின்றி அவமதிப்புக்கும், தீங்கு விளைவிக்கும் தன்மையைக் கொண்டதாகும் என்று சுல்தான் நினைவுறுத்தினார்.
மக்கள் சமூக ஊடகங்களில் ஏதாவது ஒரு கருத்து சொல்வதற்கு முன்னதாக அது குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும். காரணம் இனம் மற்றும் மதம் தொடர்பான விவகாரங்கள் உணர்ச்சியைத் தூண்டக்கூடியதாகும். அத்தகையத் தூண்டுதல் உட்பட விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய உணர்ச்சிகரமான விவகாரங்களை எழுப்பக்கூடாது என்று வலைவாசிகளுக்கு சுல்தான் அறிவுறுத்தினார்.
இனம் மற்றும் மதம் சார்ந்த கதைகள் அல்லது கருத்துக்கள் மலேசியர்களிடையே பிரிவினையும், பிளவுகளையும், அவ நம்பிக்கையையும் ஏற்படுத்தக்கூடியதாகும். அவற்றினால் என்ன பயன் என்று சுல்தான் ஷாராஃபுடின் கேள்வி எழுப்பினார்.
சிலாங்கூர் மக்களுக்கு தாம் வலியுறுத்திக் கொள்வது என்னவென்றால், இனம் மற்றும் மதத்தைப் பொருட்படுத்தாமல் சிலாங்கூர், மலேசியா ஆகியவற்றில் அக்கறை கொள்ளுங்கள். ஒன்றாக இணைந்து வேலை செய்யுங்கள். அனைத்து இனங்களின் பொதுவான தன்மைகளில் கவனம் செலுத்தங்கள். வேறுபாட்டையும், பிரிவினைப் பற்றியும் பேசாதீர்கள் என்று சுல்தான் வலியுறுத்தினார்.
தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் தலைவர் டத்தோ ஶ்ரீ வோங் சுன் வாய்க்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் சுல்தான் ஷாராஃபுடின் இதனை வலியுறுத்தியுள்ளார்.








