பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்.02-
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மதுபான உணவகம் ஒன்றில் குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் திளைக்க செய்யும் உபசரணைப் பணியாளர்களான ஸ்ரீ லங்கா பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் குடிநுழைவுத் துறையினர், கடந்த ஒரு வார காலமாக மேற்கொண்ட உளவு நடவடிக்கையின் விளைவாக இந்த அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக மலேசிய குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.

குடிநுழைவுத்துறை அமலாக்க அதிகாரிகளின் வருகையைக் கண்டதும் அந்த மதுபான உணவகத்தில் இருந்த அந்நிய நாட்டவர்கள், உணவகத்தின் மேல் மாடியில் பதுங்கி கொள்ள படிக்கட்டு வழியாக தப்பிக்க முயற்சித்தனர். சிலர் துணி அலமாரியில் ஒளிந்து கொண்டனர். எனினும் அந்த உணவகத்தின் பின்புறமுள்ள ஆபத்து அவசர இரும்புப் படிக்கட்டு வாயிலாக அமலாக்க அதிகாரிகள் மேல் மாடிக்குச் சென்று அனைவரையும் வளைத்துப் பிடித்ததாக டத்தோ ஸாகாரியா குறிப்பிட்டார்.
12 ஸ்ரீ லங்கா பிரஜைகள் மற்றும் 8 உள்நாட்டவர்கள் என 20 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீ லங்காவைச் சேர்ந்த 9 பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டதாக டத்தோ ஸாகாரியா தெவித்தார்.

எனினும் இவர்கள் யாரும் வர்த்தக நோக்கில் கடத்தி வரப்பட்டவர்கள் அல்ல என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

20 திலிருந்து 33 க்கு இடைப்பட்ட வயதுடைய இந்த ஸ்ரீ லங்கா பெண்கள், கடந்த ஓராண்டு காலமாக அந்த உணவகத்தில் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும் உபசரணைப் பணியாளர்களாக 2 ஆயிரம் ரிங்கிட் சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களின் கடப்பிதழ்களை முதலாளி பிடித்து வைத்திருப்பதாக அறியப்படுகிறது.

இந்த உணவகத்தில் குடிநுழைவு அதிகாரிகள் பல முறை சோதனையிட்டு, உபசரணைப் பெண்களைக் கைது செய்த போதிலும் தொடர்ந்து ஸ்ரீ லங்கா பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு வந்துள்ளனர். பிடிபட்ட அனைவரும் கேஎல்ஐஎ தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று டத்தோ ஸாகாரியா மேலும் கூறினார்.








