செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் பயன்படுத்தாவிட்டால், அது நாடுகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நிலை ஏற்படலாம் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.
மலேசியாவின் செயற்கை நுண்ணறிவு இலக்குகள் தெளிவாக இருப்பதாகக் கூறிய அவர், உற்பத்தித் திறனை அதிகரிப்பது, சிறு தொழில்களைப் போட்டியிடச் செய்வது, தொழில்துறைகளை அதிக மதிப்புள்ள பணிகளை நோக்கி நகர்த்துவது ஆகியவை அவற்றில் அடங்கும் என்றார்.
சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற உலகளாவிய டிஜிட்டல் வர்த்தகக் கண்காட்சியில் உரையாற்றிய அன்வார், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மனிதகுலத்துக்குச் சேவை செய்யும் வகையில், நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட கட்டமைப்பு அவசியம் என்றார்.
வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, தொழில்நுட்ப இடைவெளியை செயற்கை நுண்ணறிவு மேலும் அதிகரிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.








