சபா,ஜூலை 28-
சபா, கொதா மருடூவில் உள்ள, உணவகம் ஒன்றில், உணவு MENU-வைப் பார்ப்பது போல் பாசாங்கு செய்து, பின் அங்கிருந்த ஓய்வு பெற்ற பெண்ணின் பணப்பை கொள்ளையடித்த அடையாளம் தெரியாத பெண்ணுக்குப் போலிஸ் வலைவீசியுள்ளது.
ஜூலை 20 தேதியன்று நடந்த அச்சம்பவத்தில், 59 வயதான பாதிக்கப்பட்ட பெண், உணவகத்தில் பணத்தை செலுத்தும் சமயத்தில் தனது பணப்பையைக் காணவில்லை என்பதை உணர்ந்து, அன்றிரவு 8.25 மணியளவில் போலிஸ் புகார் அளித்துள்ளார்.
அந்த கொள்ளை சம்பவத்தில், பாதிக்கப்பட்டவருக்கு ஆயிரத்து 800 ரிங்கிட் பணம், சில ஆவணங்கள் மற்றும் வங்கி அட்டைகள் உட்பட தோராயமாக ஈராயிரத்து 500 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அச்சம்பவம் குறித்து கண்டெடுக்கப்பட்ட மறைகாணி காணொலியில், கொள்ளையடித்த பெண், பாதிக்கப்பட்ட பெண்ணின் அருகில் சென்று, அவரின் பையில் இருந்த பணப்பையை எடுத்து, உணவகத்தில் இருந்து வெளியே தப்பி சென்ற காட்சி பதிவாகியுள்ளதை போலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.








