பட்டர்வொர்த், ஆகஸ்ட்.04-
கடந்த சனிக்கிழமை பட்டர்வொர்த், தாமான் புக்கிட் ஜம்பூலில் ஆவேசமாக செயல்பட்டு, பெரும் ரகளையை ஏற்படுத்திய ஓர் இந்தோனேசிய ஆடவர், போலீசாரிடம் பிடிபட்ட பின்னர் இறந்து விட்டதாக பினாங்கு இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ முகமட் அல்வி ஸைனால் தெரிவித்தார்.
அந்த நபர் கைது செய்யப்பட்ட பின்னர் சுங்கை நிபோங் போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்ட போது, அவர் மயங்கி விழுந்தார். பின்னர் அவர் அம்புலன்ஸ் வண்டியின் மூலம் பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார். ஆனால், அவர் இறந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதாக டத்தோ முகமட் அல்வி குறிப்பிட்டார்.
முன்னதாக, அந்த நபர், அன்றைய தினம் மாலை 6.20 மணியளவில் அந்த வீடமைப்புப் பகுதியின் 13 ஆவது மாடியில் கையில் இரும்புத் தடியை ஏந்திக் கொண்டு, ஆவேசமாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது என்று அவர் விளக்கினார்.








