சிறார் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான கைதி ஒருவர் சுங்கை பூலோ சிறைசாலையிலிருந்து தப்பியது தொடர்பாக, அதிகாரிகளின் அலட்சியப் போக்கு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 வயது முகமது ஹசன், என்ற அந்தப் பாகிஸ்தானியக் கைதி, ஷா ஆலம் நீதிமன்ற விசாரணையை முடித்துவிட்டு சிறைக்கு மாற்றப்படும்போது தப்பியோடினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார், இதில் அதிகாரிகளின் அலட்சியமோ அல்லது நிலையான செயல்பாட்டு நடைமுறையான SOP மீறலோ உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
விசாரணை முடியும் வரை பணியில் இருந்த சில அதிகாரிகள் தற்காலிகமாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆரஞ்சு நிற டி-ஷர்ட் மற்றும் கறுப்பு நிற காற்சட்டை அணிந்திருந்த அந்தக் கைதி, இன்னும் சுங்கை பூலோ பகுதியிலேயே இருக்கலாம் என நம்பப்படுகிறது.
எல்லைச் சோதனைகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொது நடவடிக்கை படை உதவியுடன் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது. சந்தேக நபர் தனது நண்பர்களுடன் தொடர்பு கொள்வது தடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் பிடிபடுவார் என்றும் ஷாசெலி கஹார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








