கெடா மாநிலம் கூலிம் ஹை-டெக் பார்க் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில், 300-க்கும் மேற்பட்ட அந்நிய தொழிலாளர்கள் தேவையான ஆவணங்கள் இன்றி பணிபுரிந்து வருவதாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக, அத்தொழிற்சாலையின் பொறுப்பாளர்களை சந்திப்புக்கு அழைத்துள்ளதாக கெடா மாநில குடிநுழைவுத்துறை தலைவர் முகமது ரிட்சுவான் பின் முகமது ஜென் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அலோர் ஸ்டார், அனாக் புக்கிட்டில் உள்ள குடிநுழைவுத்துறை அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் பொறுப்பாளர்களிடமிருந்து முழுமையான விளக்கத்தை பெற்ற பின்னரே அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் முகமது ரிட்சுவான் விளக்கமளித்துள்ளார்.
கடந்த மார்ச் 26-ஆம் தேதி, கோலாலம்பூரை தளமாகக் கொண்ட ஒரு அரசு சாரா இயக்கம், அத்தொழிற்சாலையின் கட்டுமான தளத்திற்குள் நுழைந்து வெளியிட்ட தகவலின் அடிப்படையிலேயே இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அந்த அரசு சாரா இயக்கத்தின் தலைவர் வெளியிட்ட தகவலின்படி, தொழிற்சாலையின் கட்டுமானம் மற்றும் அலுவலக பணிகளில் ஈடுபட்டுள்ள அந்நிய தொழிலாளர்கள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்து, தேவையான ஆவணங்கள் இன்றி பணிபுரிந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், 300-க்கும் மேற்பட்ட அந்நிய தொழிலாளர்கள் அங்கு பணிபுரிந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இச்சர்ச்சை குறித்து தொழிற்சாலை நிர்வாகத்தின் விளக்கங்களை பெற்ற பின்னர், நடைமுறைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முகமது ரிட்சுவான் உறுதியளித்துள்ளார்.








