மலேசியாவில், பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த இரு தனித்தனி பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 20 வயது சீன நாட்டைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி குச்சாய் லாமா எம்ஆர்டி நிலையத்தில் 22 வயதான பெண் ஒருவரை, சந்தேக நபர் அவருடைய அனுமதி இல்லாமல் பின்னால் இருந்து கட்டிப்பிடித்ததாக கூறப்படுகிறது.
மேலும், அந்த பெண் கழிப்பறைக்கு செல்ல முயன்றபோது அவர் தொடர்ந்து பின் தொடர்ந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கிளானா ஜெயா எல்ஆர்டி ரயில் பாதையில் பயணம் செய்த மற்றொரு பெண்ணிடம், சந்தேக நபர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், ரயிலில் பயணம் செய்யும் போது பெண்மணியின் உடையின் கீழ் புகைப்படம் எடுக்க முயன்றபோது பொதுமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டதாகவும் ரேபிட் ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, சந்தேக நபர் ஏப்ரல் 9-ஆம் தேதி இரவே கைது செய்யப்பட்டு, ஏப்ரல் 24-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.








