கோலாலம்பூர், ஜூலை.26-
நாட்டின் பிரதமராகவும், பெர்சத்து கட்சியின் தலைவராகவும் தாம் இருந்த போது, 2020 ஆண்டில் தமது சொந்தக் கட்சியே தம்மை நிராகரித்தப் பின்னர் பிரதமர் பதவிலிருந்து தாம் உடனடியாக விலகிய அதே அணுகுமுறையை, டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பின்பற்ற வேண்டும் என்று துன் மகாதீர் முகமது கேட்டுக் கொண்டார்.
கோலாலம்பூர் டத்தாரான் மெர்டெக்காவில் பெரிக்காத்தான் நேஷனல் ஏற்பாட்டில் நடைபெற்ற துருன் அன்வார் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் துன் மகாதீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டிற்கு இரண்டாவது முறையாகத் தாம் பிரதமர் பொறுப்பை ஏற்ற பின்னர் பிரதமர் பதவியிலிருந்து விலகியது, தமக்கு அடுத்து டான்ஸ்ரீ முகைதீன் யாசின் பிரதமராகப் பொறுப்பேற்றது என 5 ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பதை துன் மகாதீர், பேரணியில் பங்கேற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
பக்காத்தான் ஹராப்பான் முதல் முறையாக ஆட்சி அமைத்த பின்னர், பிரதமர் பதவியிலிருந்து தாம் விலகியதால் அந்த கூட்டணி தலைமையேற்று இருந்த அரசாங்கம் கவிழ்ந்தது. அதன் பின்னர் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையில் ஒரு கூட்டணி அரசாங்கம் அமைந்தது.
தலைவர் என்ற முறையில் கட்சியில் எனக்கு ஆதரவு இல்லாமல் போனது. வலுவிழந்து விட்டேன். எனவே பிரதமர் பொறுப்பிலிருந்து உடனடியாக விலகினேன் என்று துன் மகாதீர் விளக்கினார்.
நம்மை மக்கள் விரும்பாவிட்டால், ஆதரவை இழந்தால் பதவி விலகித்தான் ஆக வேண்டும். அதுதான் உலக நியதி. அதற்குச் சான்றாக உலகத் தலைவர்கள் பலரை முன்னுதாரணமாகக் காட்டிய துன் மகாதீர், அன்வார் பதவி விலகியாக வேண்டும் என்று தமது உரையில் வலியுறுத்தினார்.








