Oct 27, 2026
Thisaigal NewsYouTube

சூப்பர் எல் நினோ: மலேசியாவில் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதி முதல் கடும் வெப்பம், வறட்சி ஏற்படும் அபாயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சூப்பர் எல் நினோ: மலேசியாவில் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதி முதல் கடும் வெப்பம், வறட்சி ஏற்படும் அபாயம்

மலேசியாவில் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதி முதல் மார்ச் மாதம் வரை வழக்கத்தைவிட அதிக வெப்பமும் குறைந்த மழைப்பொழிவும் நிலவக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது. சூப்பர் எல் நினோ எனப்படும் மிக வலுவான எல் நினோ நிகழ்வு தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுவதே இதற்குக் காரணமாகும்.

மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் தேசிய வானிலை மற்றும் நிலநடுக்க நடவடிக்கை மையத்தின் மூத்த இயக்குநர் மக்ருன் ஃபாட்லி முஹமட் ஃபாஹ்மி இதனைத் தெரிவித்துள்ளார். எல் நினோ தற்போது வலுவான நிலையில் இருப்பதாகவும், இந்த ஆண்டின் இறுதியிலும் அடுத்த ஆண்டின் தொடக்கத்திலும் அது மிக வலுவான நிலையை எட்டக்கூடும் என்றும் அவர் கூறினார்.

மழைப்பொழிவு குறைந்தால் வெப்ப அலைகள் ஏற்படுவதுடன், போதிய மழையின்மையால் நீர்ப்பற்றாக்குறையும் வறட்சியும் உருவாகும் அபாயம் அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். பெர்னாமா தொலைக்காட்சியின் ‘ஃபோக்கஸ் 15’ நிகழ்ச்சியில் இன்று செவ்வாய்க்கிழமை பங்கேற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

இதற்கிடையில், 2026/2027 வடகிழக்குப் பருவமழை இன்று தொடங்கியுள்ள நிலையில், அதன் ஆரம்பக் கட்டத்தில் நவம்பர் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி வரை நீடித்த கனமழை பெய்யும் மூன்று முதல் ஐந்து காலகட்டங்கள் ஏற்படக்கூடும் என்றும் அவர் கூறினார்.

இதனால் கிளந்தான், திரங்கானு, பகாங் ஆகிய கிழக்குக் கரை மாநிலங்களிலும் ஜோகூரின் கிழக்குப் பகுதிகளிலும் வெள்ள அபாயம் அதிகரிக்கக்கூடும். வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிப்போர் பருவமழையின் தொடக்கத்தில் கனமழை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், பருவமழையின் இறுதிக் கட்டத்தில் ஏற்படக்கூடிய வெப்பம் மற்றும் நீர்ப்பற்றாக்குறையை எதிர்கொள்ளவும் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →