முன்னாள் செத்தியாவாங்சா நாடாளுமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட், ஆண், பெண் இருவர் தனிமையில் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
1995ஆம் ஆண்டு சிலாங்கூர் ஷரியா குற்றவியல் சட்டத்தின் 29ஆவது பிரிவின் கீழ் நடைபெறும் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியதாக அவரது வழக்கறிஞர் முஹமட் அமிருல் அஷ்ராஃப் எ. கானி தெரிவித்தார்.
குற்றச்சாட்டுப் பதிவு செய்வதா என்பதைச் சிலாங்கூர் ஷரியா அரசுத் தரப்பு வழக்கறிஞர் பிரிவு முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.
44 வயதான நிக் நஸ்மி, இன்று காலை 9.15 மணிக்கு ஜாய்ஸ் அலுவலகத்தில் முன்னிலையானார். பிற்பகல் 1.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டார். அவர் முன்னிலையானதை ஜாய்ஸ் இயக்குநர் டத்தோ முஹமட் ஷாஸிஹான் அஹ்மாட் உறுதிப்படுத்தினார். எனினும், மேற்கொண்டு கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
கடந்த அக்டோபர் 15ஆம் தேதி பெட்டாலிங் மாவட்டத்தில் அரசியல் தலைவர் ஒருவர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாகக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை ஜாய்ஸ் முன்னதாக உறுதிப்படுத்தியிருந்தது.








