மலேசியாவில் அதிகரித்து வரும் ரொஹிங்கியா அகதிகள் மற்றும் அவர்களின் சட்டவிரோதக் குடியிருப்புகள் குறித்தப் பிரச்சனைக்கு, பல்வேறு அரசு ஏஜென்சிகளின் கூட்டு நடவடிக்கை அவசியம் என்று போலீஸ் படைத் துணைத் தலைவர் டான்ஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய துணை ஐஜிபி, அகதிகள் விவகாரத்தை மலேசியப் போலீஸ் படை மட்டும் தனித்துத் தீர்த்துவிட முடியாது என்றும், அனைத்துலக சமூகத்தின் ஒருங்கிணைந்த அணுகுமுறை இதற்குத் தேவை என்றும் குறிப்பிட்டார்.
தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, மலேசியாவில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 472 அகதிகள், அடைக்கலம் கேட்டு ஐ.நா. தூதரக அட்டையை வைத்துள்ளனர். இதில் ஒரு லட்சத்து 97 ஆயிரம் பேர் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள். இதில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 200 பேர் ரொஹிங்கியா இனத்தவர்கள் ஆவர் என்று அயோப் கான் விளக்கினார்.
சமூக ஊடகங்களில் செய்திகள் பரவும்போது மட்டுமல்லாமல், சட்டவிரோதக் குடியிருப்புகளுக்கு எதிராகப் போலீசார் தொடர் சோதனைகளை நடத்தி வருவதாக அயோப் கான் கூறினார்.
மேலும், அந்தமான் கடலில் அகதிகளுக்காகத் தனியாக இடைத்தங்கல் முகாம் அமைப்பது, மனிதக் கடத்தல் கும்பல்களுக்குச் சாதகமாக அமைந்து, மேலும் பல அகதிகள் நாட்டிற்குள் நுழைய வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.








