கோத்தா பாரு, டிசம்பர்.27-
கடந்த வியாழக்கிழமை கோத்தா பாரு, மெலோர் பொதுச் சந்தையில் நடந்த கலவரம் தொடர்பாக, நேற்று 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 முதல் 50 வயதுடைய அந்த 12 பேரில், 5 ஆண்களும், 7 பெண்களும் அடங்குவர்.
கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் நடந்த இக்கலவரம் குறித்து, 19 வயது பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்ததையடுத்து, இந்த கைது நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தன்னை மற்றொரு பெண்ணும், அவரது குடும்பத்தினரும் கடுமையாகத் தாக்கி காயம் விளைவித்ததாக அப்பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
உடல் முழுவதும் கடுமையான காயங்களுடன் காணப்பட்ட அப்பெண் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, இச்சம்பவம் குறித்து போலீசார் மேல் விசாரணை நடத்தி வருவதாக கோத்தா பாரு மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் ரொஸ்டி டாவுட் தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கானது குற்றவியல் சட்டம் பிரிவு 147-ன் கீழ் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட 12 பேரும், தடுப்புக் காவல் அனுமதி பெற, கோத்தா பாரு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.








