தேசிய தினம் மற்றும் மலேசிய தினக் கொண்டாட்டங்களுக்காக இதுவரை 48.63 மில்லியன் ரிங்கிட் நன்கொடை திரட்டப்பட்டுள்ளதாக தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஹில் தெரிவித்தார்.
இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 118 விழுக்காடு அதிகமாகும். இந்த ஆண்டு 139 நிறுவனங்கள் நன்கொடைகளை வழங்கியுள்ள நிலையில், வரும் செப்டம்பர் 16ஆம் தேதி கூச்சிங்கில் நடைபெறவுள்ள மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மேலும் சில நிறுவனங்கள் நன்கொடை வழங்க முன்வந்துள்ளதால், இந்தத் தொகை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.
இன்று புத்ரஜெயாவில் தொடர்புத்துறை அமைச்சில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய தின கொண்டாட்டம் மற்றும் மலேசிய தின கொண்டாட்டம் ஆகியவற்றுக்கு வியூக பங்காளிகளிடமிருந்து நன்கொடைகளை பெறும் நிகழ்ச்சிக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் டத்தோஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஹில் இதனை தெரிவித்தார்.
நன்கொடையாளர்களின் ஆதரவு, இம்முறை உற்சாகமூட்டும் வகையில் இருப்பதாக குறிப்பிட்ட டத்தோஸ்ரீ ஃபாஹ்மி, வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி புத்ரஜெயா சதுக்கத்தில் நடைபெறும் தேசிய தினக் கொண்டாட்டத்தில் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நிகழ்வையொட்டி மூடப்படும் சாலைகள், மாற்று வழித்தடங்கள் குறித்த தகவல்களை போலீஸ் அறிவிக்கும் என்றும், பொதுப் போக்குவரத்து வசதியாக எல்ஆர்டி மற்றும் எம்ஆர்டி சேவைகள் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் தெரிவித்தார்.
தேசிய தினத்தை முன்னிட்டு நடைபெறும் ‘அம்பாங் மெர்டேக்கா’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் முழு விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதையும் அவர் குறிப்பிட்டார். இந்த செய்தியாளர் கூட்டத்தில் தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நியே சிங் மற்றும் அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ அப்துல் ஹலீம் ஹம்ஸா ஆகியோர் கலந்து கொண்டார்.








