ஈப்போ, அக்டோபர்.03-
கடந்த திங்கட்கிழமை பேரா, செம்மோர், கம்போங் கோல குவாங்கில் உள்ள ஒரு வீட்டில் தனது மனைவியைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு மியன்மார் பிரஜைக்கு எதிரான கொலை வழக்கை ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.
37 வயது மியோ நாயிங் சோ என்ற அந்த மியன்மார் பிரஜை, தனக்கு எதிரான குற்றச்சாட்டின் தன்மையைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில், மொழிப்பெயர்ப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு ஏதுவாக இக்கொலை வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக மாஜிஸ்திரேட் S. புனிதா தெரிவித்தார்.
அந்த மியன்மார் பிரஜை, 28 வயதுடைய தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராற்றில் அவரைக் கத்தியால் குத்திக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், மரணத் தண்டனை அல்லது கூடியபட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த மியன்மார் பிரஜை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
இக்கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான ஈப்போ போலீஸ் தலைமையகத்தை சேர்ந்த ஏசிபி ஜெயன் சுப்பிரமணியமும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.








