தபூங் ஹாஜி அறவாரியம் தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று அல்லது அடுத்த புதன்கிழமை அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்படலாம் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
தபூங் ஹாஜி அறவாரியம், நிர்வாகச் சீரமைப்பு மற்றும் முன்னேற்றம் சீராகத் தொடர்வதை உறுதி செய்வதற்காக, அறிக்கையை வெளியிடும் முடிவு தாமதப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
சேமிப்பாளர்களின் நம்பிக்கையைப் பாதிக்காமல் இருக்கவே இந்தத் தாமதம் என்றும், ரசீத் உசேன் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, தபூங் ஹாஜி அறவாரியம் இப்போது கடுமையான தணிக்கையின் கீழ் நன்கு நிர்வகிக்கப்படும் வெளிப்படையான நிறுவனமாக இயங்கி வருவதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.
தபூங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையை வெளியிடுவது கொள்கையளவில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு அல்லது உடனடியாக அது வெளியிடப்படலாம் என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். முன்னாள் நிதித் துறை பொது செயலாளர் தபூங் ஹாஜிஅறவாரியத்தின் வியூக சொத்துக்களை விற்ற விவகாரம் குறித்த குழப்பங்களைத் தொடர்ந்து, இந்த இறுதி அறிக்கையை வெளிப்படையாக வெளியிடுவது குறித்து விவாதிக்கப்படும் என்று சமய விவகார துணை அமைச்சர் டுல்கிஃப்லி ஹசன் நேற்று தெரிவித்திருந்த நிலையில் பிரதமரின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.








